ஆரணி: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்ய முயற்சி
ஆரணி அருகே, போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.;
தாசில்தாரை கத்தியை காட்டி விரட்டியடித்த விவகாரம் தொடர்பான புகார் மீது, நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ்நகர் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 55 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதில், 18 பேர் வீடு கட்டாமல் இருந்து வந்தனர். வீடு கட்டாமல் இருந்து வரும் 18 பேரும் அரசு ஊழியர்கள், எனத் தெரிய வந்தது.
அந்த இடத்தை அவர்களுக்கு வழங்காமல், வீட்டுமனை இல்லாமல் இருக்கும் வேறு நபர்களுக்கு பட்டா வழங்க அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட அரசு ஊழியர்களில் சிலர், அந்த இடத்தில் தற்காலிகமாகக் கொட்டகை அமைத்தனர்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை தனித் தாசில்தார் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, தற்காலிக கொட்டகையை அகற்றுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த சிலர், தாசில்தாரை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி விரட்டியடித்தனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆரணி-இரும்பேடு இந்திராகாந்தி சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆதிதிராவிடர் நலத்துறை தனித் தாசில்தார் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக, உறுதியளித்ததும் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.