ஆரணி அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் குட்காவுடன் ஒருவர் கைது
ஆரணி அருகே அதிகாலை காரில் கடத்திய ரூ.2லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆரணி அருகே அதிகாலை காரில் கடத்திய ரூ.2லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை சினிமா பாணியில் துரத்தி சென்று போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெளிமாநிலங்களில் கொண்டுவரப்பட்டு அதிகளவில் விற்பதாக ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த ஒரு வாரமாக ஆரணி தாலுகாவிற்கு உட்பட்ட சேவூர் புறவழிச்சாலை, இரும்பேடு கூட்ரோடு, சோமந்தாங்கல் கூட்ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி அதிகாலை 5 மணியளவில் ஆரணி எஸ்.வி. நகரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெட்கர் கன்ராயன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆரணியில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற காரை சோதனைக்காக நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரை 2 கி.மீ. தூரம் ஜீப்பில் சினிமா பாணியில் விரட்டி சென்றனர்.
போலீசார் பின்தொடர்ந்து வருவதை பார்த்த 2 வாலிபர்கள், காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து, போலீசார் விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். சோதனையில், காரில் 20 மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளுக்கு சப்ளை செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கார், செல்போன்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம், கங்காவாஸ் மற்றும் சிவாலி கிராமங்களை சேர்ந்த முகேஷ் , கைலாஷ் ஆகிய 2 வாலிபர்களையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.