ஆரணியில் போலி டீத்தூள் விற்பனை; அதிகாரிகள் நடவடிக்கை
ஆரணியில் போலி டீத்தூள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கடைகளில் போலி டீ தூள் விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பிரபல டீ தூள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக தயாரித்து டீ தூள் விற்பனை செய்வதாக அந்த நிறுவனத்தின் சென்னை சீனியர் மேலாளர் மணிமாறன் என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து டாடா சக்கரா கோல்ட் டீ நிறுவனத்தின் சென்னை மண்டல சீனியர் மேலாளர் மணிமாறன், ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில்,
எங்கள் நிறுவனத்தின் மூலம் டாடா சக்கரா கோல்ட் டீத்தூள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் எங்கள் நிறுவனத்தின் முத்திரையை ஒட்டி போலியான டீ தூள் விற்பனை செய்து வருவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளில் சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் மற்றும் தனியார் டீ நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி டீ தூள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆரணி நகரில் உள்ள ஓட்டல், மளிகை கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பல்வேறு கடைகளில் போலி டீ தூள் பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 80 கிலோ போலி டீ தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கடைகளுக்கு இதனை வழங்கியவர்கள் யார் என்பது குறித்தும், இந்த போலி டீத்தூள் பாக்கெட்டுகள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.