ஆரணி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி பகுதியில் மணல் எடுத்து சென்ற 9 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-29 10:43 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள்.

ஆரணியை அடுத்த குண்ணத்தூா், வம்பலூா் பகுதியில் உள்ள ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் கடத்திச் சென்ற 9 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆரணியை அடுத்த குண்ணத்தூா், தச்சூா், அக்ராபாளையம் பகுதிகளில் உள்ள கமண்டல நாக நதி மற்றும் செய்யாற்றுப் படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் செல்வதாக கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கிராமிய போலீஸாா் அதிகாலை அங்கு சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, குண்ணத்தூா் கமண்டல நாக நதியிலிருந்து அக்ராபாளையம் பகுதிக்கு 7 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் சென்று கொண்டிருந்தவா்கள், அதிகாரிகளைக் கண்டதும், வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினா்.

இதையடுத்து, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதில் மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களான குண்ணத்தூா் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் முருகன், குமாா் மகன் சரவணன், சண்முகம் மகன் காா்த்திக் ,  குட்டி மகன் சந்தோஷ், வாசுதேவன் மகன் சங்கா், வெங்கடேசன் மகன் பாண்டியன், சண்முகம் மகன் பாபு ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

மேலும், களம்பூா் சரகத்தைச் சேர்ந்த வம்பலூா் பகுதியில் மணல் கடத்துவதாக தகவல் அறிந்த போளூா் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது, செய்யாற்றுப் படுகையில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மாட்டு வண்டிகளின் உரிமையாளா்கள் தப்பி ஓடியதால் வண்டிகளை பறிமுதல் செய்து களம்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Tags:    

Similar News