ஆரணி அருகே பட்டப்பகலில், 65 பவுன் நகை திருட்டு

ஆரணி அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் வீட்டில் 65 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-09-11 01:53 GMT

ஆரணி அருகே, 65 பவுன் நகை திருட்டு (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணி அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் அலுவலக ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 65 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் சண்முகம் , அவரது மனைவி மரகதம் இருவரும் வசித்து வருகின்றனர். இவரது மகன் நித்திஷ்குமாா் ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். மருமகள் டெல்லிபாய் ஆகியோா் உள்ளனா்.

நேற்று நித்திஷ்குமாரும், டெல்லிபாயும் வேலூருக்கு சென்றுவிட்டனா்.

சண்முகம், மரகதம் தம்பதியினா் பகல் 10.30 மணி அளவில் அவர்கள் வீட்டின் அருகே உள்ள தேவாலயத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். பின்னர் பகல் 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது உள்பக்கம் தாழ்பாள் போட்டு இருந்தது. உடனடியாக வீட்டில் பின்பக்கம் போய் பார்த்தபோது கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 65 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தம்பதி வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை திருடி சென்றுள்ளனர். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News