மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
ஆரணி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை என கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம். சந்தவாசல் அருகே கேளூர் தேப்பனந்தல் கிராமத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாட்டு சந்தை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி மற்றும் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன.
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்த சந்தைக்கு வருகின்றனர். தற்போது மளிகை கடை உள்ளிட்ட அனைத்து வியாபாரம் சம்பந்தப்பட்டவை கணினி மயமாக மாறிவிட்ட நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் விதமாக தேப்பனந்தல் மாட்டு சந்தையில் தற்போது வரையில் கைகளில் துண்டு போட்டு மாட்டு விவசாயிகள் விலை பேசும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டு சந்தையில் அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும் குவிந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சுமார் ரூ.3 கோடிக்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் உற்சாகமாக காணப்பட்டனர்.
இச்சந்தையில் ஆடுகள், கோழிகள் மற்றும் காய்கறிகள், வீட்டுப்பொருட்கள் விற்பனைக்கு வருவதால் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் இச்சந்தைக்கு வாரம் தோறும் வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.