ஆரணியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
ஆரணியில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் அரையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.பழனி. ஆரணி நீதிமன்றத்தைச் சேர்ந்த வக்கீலான அவர் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் எஸ். ஸ்ரீதரிடம் புகார் மனு கொடுத்தார்.
மனுவில், வீட்டுமனை சம்பந்தமாக எனக்கும் அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்தநிலையில் என்னையும், எனது மனைவியையும் தாக்கி கற்களால் வீசி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நான் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை, எனத் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர், செயலாளர் எஸ்.பாலாஜி, பொருளாளர் எஸ்.செந்தில் ஆகியோர் சங்க அவசர கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாகவும், வருகிற 18-ந்தேதி திங்கட்கிழமை மீண்டும் கூட்டத்தைக் கூட்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டம் மேற்கொள்வது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி வக்கீல்கள் அனைவரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து அறையிலேயே இருந்து கொண்டனர்.
கூட்டத்தில் வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள் வி.வெங்கடேசன், ஏ.சிகாமணி, எஸ். தனஞ்செழியன், எம்.மூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் சந்திரசேகர், மார்க்கபந்து உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.