டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் சாலைமறியல்; அமைச்சர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Tirupur News,Tirupur News Today-குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, நடுரோட்டில் அமர்ந்துகொண்டு சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உ.ள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24 டாஸ்மாக் மதுக்கடைகள் இந்த அடிப்படையில் நிரந்தரமாக மூடப்பட்டன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சாலை பணிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர். வழியில் உப்பாறு அணை அருகே உள்ள தேர்ப்பாதையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 பேர் திடீரென அமைச்சர் கயல்விழிசெல்வராஜின் காரை முற்றுகையிட்டனர். அப்பகுதி பொதுமக்கள், தேர்ப்பாதையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என, அமைச்சர் கயல்விழியிடம் வலியுறுத்தினர். பின்னர் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தேர்ப்பாதையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என, கைகளை உயர்த்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர்களுடன் வந்திருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தாராபுரம் பூளவாடி மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.