அத்திக்கடவு திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வருமா? திருப்பூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
Tirupur News- அத்திக்கடவு திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.;
Tirupur News,Tirupur News Today- தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்; அதற்கேற்ப, புதியன ஏதாவது நடக்க வேண்டும்' என்ற எண்ணம், ஒவ்வொருவரின் மனதிலும் எழுவதுண்டு.
அவ்வரிசையில், கொங்கு மண்டல மக்களின் அரை நுாற்றாண்டு கனவு திட்டமான, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை, ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர் விவசாயிகள்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கி, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறும் என்ற உத்தரவாதத்துடன் திட்டப்பணி நிறைவு பெற்று, வெள்ளோட்ட அடிப்படையில் உள்ளது.
வெள்ளோட்டம் பார்க்கும் பணி, 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டமிடலில், நீர்வளத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டம், அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திட்டத்தை செயல்படுத்த தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் முயற்சி மேற்கொண்டாலும், அ.தி.மு.க., ஆட்சியில் தான், திட்டம் உயிர் பெற்றது; 'விறுவிறு'வென பணிகள் நடந்தன. 'அத்திக்கடவு திட்டம், அரசியல் ரீதியாக கணிசமான ஓட்டு வங்கியை அறுவடை செய்து கொடுக்கும்' என, அரசியல் கட்சிகள் நம்பின.
இந்நிலையில், திட்டம் முடிவுற்ற நிலையில், 'திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தி.மு.க., அரசு ஆர்வம் காட்டவில்லை' என, அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். 'திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது; வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது; நிறைகுறைகள் சரி செய்த பின், திட்டம் செயல்பாட்டுக்கு வரும்,' என, தி.மு.க., அரசு கூறி வருகிறது.
எனவே, தை பிறந்துள்ள நிலையில் அத்திக்கடவு திட்டத்துக்கு வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்புமக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.