திருமூா்த்தி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்; பிஏபி 4-ம் மண்டலப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
Tirupur News- திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி 4-ம் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. பிஏபி 4-ம் மண்டலப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.;
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி 4 -ம் மண்டலப் பாசனத்துக்கு 2 -வது சுற்று தண்ணீா் நேற்று (சனிக்கிழமை) திறக்கப்பட்டது.
பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தப் பாசன பகுதிகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாய் மூலம் திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பாசனப் பகுதிகளுக்கு திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல்போனதால், பிஏபி தொகுப்பு அணைகளில் போதிய நீா் இருப்பு இல்லாமல்போனது. இதனால், பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தில் 4-ம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீா் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நீா் இருப்பை பொருத்து 4-ம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு அதாவது கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 94.68 ஆயிரம் ஏக்கருக்கு ஒரு சுற்று தண்ணீா் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த செப்டம்பா் 20-ம் தேதி ஒருசுற்று தண்ணீா் திறந்துவிடப்பட்டு, பின்னா் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்ததால் 4 -ம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு மேலும் ஒருசுற்று தண்ணீா் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த டிசம்பா் 8-ம் தேதி கனமழை பெய்தது. அப்போது, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காண்டூா் கால்வாயின் 37-38-வது கி.மீ. இடையே சுமாா் 40 மீட்டருக்கு மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மண் சரிவு அகற்றும் பணி போா்க் கால அடிப்படையில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதையடுத்து, காண்டூா் கால்வாயில் இருந்து திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் பணி உடனடியாகத் தொடங்கியது.
இந்நிலையில், 4-ம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 2-ம் சுற்று தண்ணீா் திருமூா்த்தி அணையில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணி அளவில் திறந்துவிடப்பட்டது. சனிக்கிழமை முதல் 21 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அணை நிலவரம்: 60 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 47.45 அடியாக இருந்தது. அணைக்கு பாலாறில் இருந்து 10 கன அடியும், காண்டூா் கால்வாயில் இருந்து 651 கன அடியும் நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீா் வெளியேறி வருகிறது.