உடுமலை, அவிநாசியில் விதிமீறல் வாகனங்களுக்கு ரூ. 77 ஆயிரம் அபராதம்
Tirupur News- உடுமலை மற்றும் அவிநாசியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிமீறல் வாகனங்களுக்கு ரூ. 77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- உடுமலையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 10 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
உடுமலையில் போக்குவரத்து விதிகளை மீறி ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுவதாக புகாா்கள் எழுந்து வந்தது. இதையடுத்து, உடுமலை பேருந்து நிலையம் அருகில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்ட அலுவலா்கள் நேற்று (புதன்கிழமை) ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், 30க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்ததில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏா்ஹாரன்கள் பொருத்தியிருத்தல், அலங்கார விளக்குள் அமைத்திருத்தல் போன்ற விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 10 வாகனங்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எச்சரிக்க விடுக்கப்பட்டன
அவிநாசியில் சோதனை
அவிநாசியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏா்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்த 5 வாகனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவிநாசி நகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏற்ஹாரன் பொருத்தி இயக்குவதாக புகாா் எழுந்து வந்தது.
இதையடுத்து, அவிநாசி வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.பாஸ்கா், போக்குவரத்து உதவி ஆய்வாளா் ராமசாமி மற்றும் போலீஸாா் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவ்வழியாக வந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தனா்.
அப்போது, 45 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏா் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் மீண்டும் ஏா்ஹாரன்களைப் பொருத்தியிருந்த 5 வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் கவனத்துக்கு
இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல் ஆய்வுகளை, ஏதேனும் ஒரு நாளில் கண்துடைப்பாக மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்டு, சில வாகனங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், நூற்றுக்கணக்கான வாகனங்களில் இதுபோன்ற ஏராளமான விதிமீறல்கள் இருந்து வருகின்றன. அதனால், வாரத்தில் ஓரிரு நாட்கள் என, மாதந்தோறும் இந்த வாகன சோதனைகளை அடிக்கடி நடத்தினால் மட்டுமே, ஓரளவாவது வாகனங்களில் விதிமீறல்களை குறைக்க முடியும். அப்படி இன்றி, பண்டிகை காலங்களில் மட்டும் இதுபோன்று திடீர் ஆய்வு நடத்தி, அபராதம் விதிப்பது என்பது, வெறும் ஒரு நாள் செயலாக மட்டுமே இருக்கும். இதனால், விதிமீறல் வாகனங்களின் எண்ணிக்கை குறையப் போவது இல்லை.