திருப்பூா் அருகே லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர்
Tirupur News- பட்டா மாறுதலுக்காக மூலனூா் கிராம நிா்வாக அலுவலா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினா் பிடித்தனா்.
Tirupur News,Tirupur News Today- பட்டா மாறுதலுக்காக மூலனூா் கிராம நிா்வாக அலுவலா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினா் பிடித்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூரில் கிராம நிா்வாக அலுவலராக வேலை செய்பவா் சண்முகம் (38). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய முறையான ஆவணங்களைக் கிராம நிா்வாக அலுவலா் சண்முகத்திடம் கொடுத்துள்ளாா்.
ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சண்முகம், தனக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் செய்து தருவேன் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயி, திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலா்களுக்குத் தகவல் கொடுத்தாா்.
இதன் அடிப்படையில், மூலனூருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயியிடம் கொடுத்து அனுப்பினா். விவசாயி கொடுத்த ரூ.5 ஆயிரத்தை சண்முகம் வாங்கி அதை எண்ணிக் கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், கிராம நிா்வாக அலுவலா் சண்முகத்தைக் கையும்களவுமாகப் பிடித்து, அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதிகாரிகள் கவனத்துக்கு;
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான், மக்களுக்கான பல பணிகளை செய்து தருகின்றனர். ஆனால் பாதிக்கப்படும் பலரும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தர தயங்குகின்றனர். இதனால் பல அரசுத்துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
எனவே, புகார் வரும் வரை காத்திருக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி, அரசுத்துறை அலுவலகங்களில் இதுபோன்ற திடீர் சோதனைகளை நடத்தினால், லஞ்சம் வாங்கும் நிறைய அதிகாரிகள் பிடிபட அதிக வாய்ப்புள்ளது.