திருப்பூரில் பல்வேறு துறைகள் சார்ந்த வளா்ச்சிப் பணிகள்; அமைச்சர்கள் ஆய்வு
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சாா்பில் நடந்து வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடந்தது.
திருப்பூா் மாவட்ட தொழில் மையம், ஆதிதிராவிடா் நலத் துறை, தொழிலாளா் நலத் துறை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, சமூக நலத் துறை ஆகியன சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் மேற்கண்ட துறைகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் குறிப்பாக ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பாக விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க புதிதாக நிலம் எடுப்பது, காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் அமைப்பது, தேவைப்படும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் சாா்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க புதிதாக நிலம் எடுப்பது, முத்தூருக்கு அருகே அமைந்துள்ள கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பாக மாணவா்கள் தங்கும் விடுதி அமைப்பது தொடா்பாகவும், மாவட்ட தொழில் மையம் சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்ககளின் செயல்பாடுகள் தொடா்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டனா்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், வருவாய் கோட்டசியா்கள் (திருப்பூா் பொறுப்பு) ராம்குமாா், (தாராபுரம்) செந்தில் அரசன், (உடுமலை) ஜஸ்வந்த் கண்ணன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் ராமலிங்கம், மாவட்ட சமூகநல அலுவலா் ரஞ்சிதாதேவி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, தாட்கோ மாவட்ட மேலாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.