அமராவதி அணை முழு கொள்ளவை எட்டுமா? : விவசாயிகள் எதிர்பார்ப்பு
அமராவதி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.;
அமராவதி அணைப்பகுதியில், நீராதார பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மழையின் போது, வனப்பகுதியின் உள்ள ஆறுகளின் வழியாக மழைநீர் வெளியேறி அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீரை நம்பி, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், கரும்பு, தென்னை, வாழை, நெல் மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் அமராவதி அணை விளங்குகிறது.கடந்த ஒரு வாரமாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்வரத்தை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர்மட்டம், 82 அடியாக இருந்தது.