உடுமலைப்பேட்டை: மாடு மேய்த்த பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு; வாலிபர் கைது

உடுமலைப்பேட்டையில் மாடு மேய்த்த பெண்ணிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-15 12:45 GMT

உடுமலைபேட்டை போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட குடிமங்கலம் விருகல்பட்டியை சேர்ந்தவர் தங்கமுத்து. விவசாயியான இவரது மனைவி வேலுமணி (வயது 56). இவர் தாங்கள் வளர்க்கும் 3 பசு மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

வேலுமணி மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், இங்கு யாராவது முயலுக்கு வலை வைத்து உள்ளார்களா என கேட்டார். இல்லை என வேலுமணி கூறியுள்ளார். அப்போது திடீரென வேலுமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து குடிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உத்தரவுப்படி, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,  குடிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையின்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பெதப்பம்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன் (24), என்பதும், வேலுமணியிடம் தாலிக்கொடியை பறித்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News