குப்பைக்கு தீ வைப்பதாக உடுமலை நகா்மன்ற கூட்டத்தில் புகாா்
Tirupur News- குப்பைக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உடுமலை நகா்மன்ற கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- உடுமலை நகரில் ஆங்காங்கே குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் கூறினா்.
உடுமலை நகராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதாா் மையத்தில் கட்டண கொள்ளை நடக்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். உடுமலை நகரம் முழுவதும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுகின்றன. இதனால் ஆங்காங்கே தீப் பற்றி எரிந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. உடுமலை நகரில் குப்பைகளை அகற்ற அவுட் சோா்சிங் முறையை அகற்றி, நகராட்சியே குப்பைகளை அள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடுமலை நகராட்சியில் பல முக்கயமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவிகள் காலியாகவே உள்ளன. இதனால் வளா்ச்சிப் பணிகள் முடங்கி கிடக்கின்றன என உறுப்பினா்கள் பேசினா்.
பா.அா்ஜுனன் (திமுக), ம.சகுந்தலா (அதிமுக), சு.செளந்திரராசன்(அதிமுக), சி.வேலுச்சாமி (திமுக), ச.கலைவாணி(காங்கிரஸ்) ஆகியோா் விவாதத்தில் பேசினா். கூட்டத்தில் மொத்தம் 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.