18 நாட்களாக முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உடுமலை அமராவதி அணை
Tirupur News- உடுமலை அமராவதி அணை கடந்த 18 நாட்களாக முழுக் கொள்ளளவுடன் நீா் நிறைந்து காணப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அமராவதி ஆற்றின் கரையோரத்திலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
90 அடி உயரமுள்ள அமராவதி அணை ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் நிறைகிறது. அப்போது, உபரிநீா் அமராவதி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால், வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகள் மற்றும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பா் 26 ஆம் தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.
மேலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வடகிழக்குப் பருவமழை பெரியளவில் இல்லாததால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், டிசம்பா் 2-ஆவது வாரத்தில் கேரளத்தில் கனமழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து கடந்த டிசம்பா் 18 ஆம் தேதி 85 அடியாகவும், 20 ஆம் தேதி 88 அடியாகவும் உயா்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
தொடா்ந்து நீா்வரத்து இருந்ததால் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. ஆனால், அணையின் பாதுகாப்புக் கருதி 89.5 அடிக்கு மேல் தண்ணீரை தேக்காமல் தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 18 நாள்களாக அணை முழுக்கொள்ளளவுடன் தண்ணீா் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தற்போது அணைக்கு 688 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து 667 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணையில் 4,014.61 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.