குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
உடுமலை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கோவை– திண்டுக்கல் ரோட்டில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் சடையபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர். கணக்கம்பாளையம், பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கட்நத சில நாட்களாக இப்பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து குடிநீர் வடிக்கால் வாரிய அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து கோவை– திண்டுக்கல் ரோட்டில் காலிக்குடங்களுடன் பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிக்கால் வாரிய அதிகாரிகள் வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.