உடுமலை:பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
Tirupur News. Tirupur News Today- கடும் வெயில் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
Tirupur News. Tirupur News Today- உடுலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம், திருமூர்த்திமலை ஆகியவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.
அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள். தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக அருவி, ஆறு, குளம் உள்ள பகுதிகளுக்கு அதிகளவில் செல்கின்றனர். திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அருவியில் குளிக்கின்றனர்.
இதேபோல் அமராவதி ஆறு பகுதிக்கும் ஏராள மானோர் செல்கின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டாலும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரலிங்கம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் உள்ளூர் மக்கள் நீராடி செல்கின்றனர்.
தகிக்கும் வெப்பத்தில் திருப்பூர்
கோடை காலம் அதிகரித்து வருவதால், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும், குடும்பங்களுடன் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். சத்தியமங்கலம் அருகில் உள்ள கொடிவேரி அணைக்கட்டு பகுதிக்கு பலரும், குளிக்கச் செல்வது அதிகரித்து வருகிறது. திருப்பூரில் இருந்து 60 கி.மீ., தூரத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு, பலரும் டூவீலர்களில், பஸ்களில் செல்கின்றனர். இன்னும் சொந்தமாக கார் போன்ற பெரிய வாகனங்கள் வைத்துள்ளவர்கள், குடும்பமாக கொடிவேரி அணைக்குச் செல்கின்றனர். திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற நீர்நிலைகள் எதுவும் இல்லாததால், கோடை காலம் வந்துவிட்டாலே, வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக பலரும் புலம்புகின்றனர்.
பனியன் தொழில் நகரமாக திருப்பூர் பகுதியில் உள்ள குளங்களை ஆழப்படுத்தி தூர் வாரினாலும் நீர்நிலைகளாக பயன்படுத்த முடியாது. குளிக்கும் செயற்கை நீரூற்றுகள் நிறைந்த பகுதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.