உடுமலை; அமராவதி அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
tirupur News, tirupur News today-அமராவதி அணையின் நீர் இருப்பு குறைந்து வருவதால் அணையை தூர்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி ஓடிவரும் அமராவதி ஆற்றை தடுத்து 1955-58 இடைப்பட்ட காலத்தில் அமராவதி அணை கட்டப்பட்டது. 9 கிலோ மீட்டர் சுற்றளவும் 90 அடி உயரமும் கொண்ட இந்த அணையில் 4 டி.எம்.சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அணைக்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படுகின்ற தண்ணீர் குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து, 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவையையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசனத் தேவையையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கின் போது மண், சிறு பாறைகள், மணல், மரக்கட்டைகள் போன்றவை தண்ணீரில் அணைப்பகுதிக்கு அடித்து வரப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்தேக்கப் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் மழைக்காலங்களில் வெள்ள அபாயமும், கோடைகாலத்தில் குடிநீருக்கும், பாசனத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற நிலையே உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
அமராவதி அணை (கோப்பு படம்)
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அணையில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. விவசாயிகளும் அதில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து தூர்வாரும் பணி பாதியில் கைவிடப்பட்டது. அதன் பின்பு தூர்வாருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை வரையிலான கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால் அதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் முற்றிலுமாக குறைந்துவிட்டது. ஆனாலும் நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் வினியாகம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணையில் ஆங்காங்கே மண்திட்டுகள், கற்கள்,சேறும் சகதியும் வெளியே காணப்படுகிறது.
இந்த சூழலை சாதகமாகக் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் அணையை தூர் வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் வருகின்ற மழைக்காலங்களில் ஏற்படும் நீர்வரத்தை தேக்கி வைக்க இயலும். சிறு மழைக்கு கூட உபரி நீரை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. கோடைகாலத்திலும் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் நீர்இருப்பு குறைந்து வருவதால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு இறுதி கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலீட்டு தொகை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 52.43 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.