அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள் ஏமாற்றம்
tirupur News, tirupur News today- பிஏபி திட்டத்தில், இரண்டு அணைகளை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத தமிழக அரசால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து வறட்சிப்பகுதிகளை பசுமையாக்கும் வகையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்பட்டது. கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது.
திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம், பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணைகள் வழியாகவும் மின் உற்பத்தி செய்து மலைப்பகுதியில் 49 கி.மீ.,தூரம் சுரங்கத்துடன் கூடிய சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆசிய அளவில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
இப்பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதம் நீர் வினியோகிக்கப்படுகிறது.கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டியதும் தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை கட்டும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கேரள அரசு 1997ல் இடைமலையாறு அணை கட்டிய நிலையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் இழுபறியாகி வருகிறது. நல்லாறு அணை கட்டினால் தற்போது மலைப்பகுதிகளில் 100 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் 20 கி.மீ., தூர பயணத்தில் எளிதில் வந்தடையும். கூடுதலாக 7.5 டி.எம்.சி., நீரும் கிடைக்கும். அதே போல் ஆனைமலையாறு அணை கட்டினால் மழை காலத்தில் வீணாகி கடலை நோக்கி செல்லும் 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கப்படும். மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்த முடியும்.
பி.ஏ.பி., திட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த பாசன பரப்பு 3.77 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் பாசன நீர் அளவை அதிகரிக்க நிலுவையிலுள்ள இரு அணைகளுடன் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பாசன நிலங்களில் முறையான பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் சிறப்பான இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலின் போது இத்திட்டம் குறித்து வாக்குறுதி மட்டுமே இடம் பெறுகிறது. இரு அணைகளையும் கட்ட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை, அணைகள் கட்ட விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க தொழில் நுட்ப கமிட்டி என கடந்த 35 ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
கடந்த தேர்தலிலும் இரு அணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேச்சு வார்த்தை என்று இல்லாமல் இரு மாநில முதல்வர்கள் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தில் நிலுவையி லுள்ள அணைகளை கட்டி முழுமையான பாசனம் மற்றும் பயிர் சாகுபடி திட்டமாக பி.ஏ.பி., திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,
கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டியதும், ஆனைமலை யாறு, நல்லாறு அணைகள் தமிழகம் கட்டிக்கொள்ள ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு, அணை கட்டி 30 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளது. ஆனால் திட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக பகுதியில் கட்ட வேண்டிய இரு அணைகளும் கட்டவில்லை.விவசாயிகள் போராட்டம் நடத்தினால், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு என இழுத்தடித்து வருகின்றனர்.
இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் நேரடியாக பேசி தீர்வு காண்பதோடு நடப்பாண்டு பட்ஜெட்டில் இரு அணைகளும் கட்டுவதற்கான ஆய்வு மற்றும் திட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.