நிறைவடைந்த அமராவதி அணை பாசன காலம்; அரசு அனுமதித்தால் உயிர் தண்ணீர், குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி
tirupur News, tirupur News today-நிறைவடைந்த அமராவதி அணை பாசன காலம் நிறைவடைந்தது. அரசு அனுமதித்தால் உயிர் தண்ணீர், குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
tirupur News, tirupur News today - உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது. தென்மேற்கு பருவ மழை துவங்கி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி அணை நிரம்பியது.
பருவ மழை தீவிர மடைந்ததால் கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது. நடப்பாண்டு பாசனம் வழக்கத்தை விட முன்னதாகவே துவங்கியது. கடந்த ஆண்டு மே 16-ம் தேதி அணையில் இருந்து அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது.
மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலூகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்டம்பரில் நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி நிறைவு செய்யப்பட்டது. அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலூகாவில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு, பிப்ரவரி 28-ம் தேதி நிறைவு பெற்றது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால் பாசனத்திலுள்ள 7,520 ஏக்கர் நிலங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஆண்டு மே 16 ல் தண்ணீர் திறக்கப்பட்டு செப்டம்பர் வரை நீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பருவம் சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை நீர் வழங்க அரசு அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில் பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு நீர் தேவை என்பதால், பாசன காலம் நீடிக்க விவசாயிகள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால்கள் பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கி பாசன காலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அணை நீர் இருப்பை பொறுத்து, பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் குடிநீருக்கு அரசு அனுமதி வழங்கினால் திறக்கப்படும், என்றனர்.