உடுமலை; சுற்றுலாத்தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Tirupur News- உடுமலை அருகே உள்ள சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.;
Tirupur News,Tirupur News Today- தீபாவளி விடுமுறையை ஒட்டி உடுமலை அருகே உள்ள சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலையில் தீபாவளி விடுமுறையை ஒட்டி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோா் குடும்பத்துடன் வந்திருந்தனா். அமணலிங்கேஸ்வரா் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னா் பஞ்சலிங்கம் அருவியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். பின்னா் இயற்கை எழில் கொஞ்சும் திருமூா்த்தி அணை பகுதியை கண்டு ரசித்தனா். இந்தப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி விடுமுறை நாளை கொண்டாட அமராவதி அணைப்பகுதிக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் இங்குள்ள முதலைப்பண்ணையை கண்டுகளித்தனா். அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். மேலும் இங்குள்ள மீன் பண்ணை, சிறுவா் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. அமராவதி அணையின் மேல்புறம் சென்ற மக்கள் அணையின் அழகை பாா்த்து ரசித்தனா். பின்னா் படகுத்துறைக்கு சென்று மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனா்.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு மலைப்பகுதிக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் வனப்பகுதியின் அழகை கண்டு ரசித்தனா். இங்குள்ள பூங்கன் ஓடைப்பகுதியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள் மற்றும் யானைகளை நேரில் பாா்த்து பரவசம் அடைந்தனா். குறிப்பாக மூணாறு செல்லும் வாகனங்கள் தமிழக-கேரள எல்லையில் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வனப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி உடுமலை, அமராவதி வன அலுவலா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.