விஷம் குடித்த தம்பதி; மனைவி பலி

உடுமலை அருகே குழந்தை இறந்ததால், மன வேதனையில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி உயிரிழந்தார்.

Update: 2022-09-07 13:21 GMT

உடுமலை அருகே, விஷம் குடித்த பெண் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சித்தக்குட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் வீரசின்னம்மாள் (20). இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு ஆண்டில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவருடன், வீரசின்னம்மாளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த இரண்டே நாட்களில் அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் வீரசின்னம்மாள் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வீரசின்னம்மாள் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் பூபாலனும், களைக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் உடுமலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி, வீரசின்னம்மாள் உயிரிழந்தார். பூபாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News