கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 15.76 கோடி நிலுவைத்தொகை வழங்கல்

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரைய நிலுவைத்தொகை ரூ.15கோடியே 76 லட்சம் வழங்கப்பட்டது.

Update: 2022-08-20 04:10 GMT

உடுமலையில், கரும்பு விவசாயிகளுக்கு,  ரூ. 15.76  கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டது.

உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நடப்பாண்டுக்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடக்கவிழா நடந்தது. 10-ம்தேதி முதல் கரும்பு அரவை நடந்து வருகிறது. ஆனால் நடப்பாண்டில் பல நாட்கள் முழு அரவைத்திறனுக்கு கரும்பு அரவை செய்யப்படவில்லை. இந்த ஆண்டு அரவைப்பருவத்தில் குறியீட்டளவிற்கு கரும்பு அரவை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 6மணிவரை மொத்தம் 90ஆயிரத்து453டன்தான் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆலைக்கு வழங்கப்படும் கரும்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கரும்பு கிரையத்தொகை, ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு அந்தந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும். கடந்த ஜூன் 1ம்தேதி முதல் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு கரும்பிற்கான கிரையத்தொகை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் அடுத்ததாக விவசாயப்பணிகளுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமப்பட்டனர்.

அவர்கள் கரும்பு கிரையத்தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆலை நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகை வழங்குவதற்கான நிதி இல்லாததால், ஆலைக்கு வழிவகைக்கடன் வழங்கும்படி தமிழக அரசை, ஆலை நிர்வாகம் தொடர்ந்து கேட்டு வந்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆலைக்கு வழிவகைக்கடனாக ரூ.15கோடியே 76லட்சம் வழங்கியுள்ளது. இந்த தொகை நேற்று முன்தினம் வந்து சேர்ந்தது.

ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், தமிழக அரசு வழிவகைக்கடனாகரூ.15கோடியே 76 லட்சம் வழங்கியுள்ளது. இதன்மூலம் கடந்த ஜூன் மாதம் 1ம்தேதி முதல் இந்த மாதம் (ஆகஸ்ட்) 7ம் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 57ஆயிரம் டன் கரும்பிற்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகை, அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி முதல் கரும்பு வழங்கி வரும் விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம், ஆலையின் நிதியின் மூலம் கரும்பு கிரையத்தொகையை வழங்கும், என்றார். 

Similar News