பள்ளி வளர்ச்சிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவனுக்கு பாராட்டு
உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டியில், பள்ளி வளர்ச்சிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவனை பலரும் பாராட்டினர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'நமக்கு நாமே' திட்டத்தில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இனியும், கூடுதலாக கட்டடம் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, பள்ளி மேலாண்மைக்குழுவின், மறு கட்டமைப்புக்கான பெற்றோர் கூட்டத்தில், இது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த தகவலை, அப்பள்ளியின், 7ம் வகுப்பு மாணவர் சுரேஷ் என்பவர், தனது பெற்றோர் வாயிலாக அறிந்தார். இதையடுத்து, தனது உண்டியல் சேமிப்பு பணம், 1,350 ரூபாயை, தலைமையாசிரியர் இன்பக்கனியிடம் ஒப்படைத்தார். இவரது செயல், ஆசிரியர்களை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. அவரை, வட்டாரக் கல்வி அலுவலர் மனோகரன், வாழ்த்தினார்.
தலைமையாசிரியர் கூறுகையில், ''மாணவர், புத்தகப்பை வாங்குவதற்காக, ஒரு ரூபாய், 2 ரூபாய் என, நாணயங்களை சேமித்து வைத்துள்ளார். பள்ளிக்கட்டடம் கட்ட பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என தெரிவித்ததன் பேரில், தனது சேமிப்பு பணத்தை வழங்கியுள்ளார். பிரார்த்தனை கூட்டத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.