துாய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
உடுமலை நகராட்சி துாய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. வீடுதோறும் சென்று குப்பை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில், 216 துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணிக்கு 50 பேர் என 276 பேர் பணியாற்றுகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 6,000 முதல், 9,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் ஏற்கனவே, 2 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, துாய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தூய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தை விடுவிக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, துாய்மை பணியாளர்கள் முற்றுகையை கைவிட்டனர்.