உடுமலை பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Tirupur News- உடுமலை பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேனர் வைத்து அறிவுறுத்தப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. தாலுகா அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களாக மாறி வருகிறது. அவ்வகையில், விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள், இ - வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளக்ஸ் பேனர் தயாரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை, வாக்காளர் பார்வைக்கு படும்படி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'வரும் 2024 ஜன., 1 நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தவிர, 2024 ஏப்., 1 - ஜூலை 1 மற்றும் அக்., 1 தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியடையும் நபர்களும், முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ஆகிய விண்ணப்பங்களில், தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
தவிர, Voter Help Line என்ற மொபைல் ஆப் வாயிலாகவும், ஆவணங்களை இணைத்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரியும், ஆதார் விபரம் இணைக்கவும், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.