உடுமலை அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
Tirupur News- உடுமலை, மூங்கில் தொழுவு அருகே வி. வேலூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருகல்பட்டியில் அரசு மதுபான கடை உள்ளது. தற்போது இந்த கடையை மூங்கில்தொழுவு அருகே உள்ள வி.வேலூர் பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் வி.வேலூர் பகுதியை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலையில் திடீரென ஒன்று திரண்டு இங்கு மதுக்கடை அமைக்க க்கூடாது என்ற கோஷத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடுமலை போலீஸ் டி.எ.ஸ்.பி. சுகுமாறன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை.இதனால் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து போராட்டம் நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதற்கு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வி.வேலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, புதிதாக அமைய உள்ள மதுக்கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அனைத்து மக்களும் இந்த மதுக்கடை வழியாகத்தான் சென்று வர வேண்டிய இடமாக உள்ளது. இதனால் இங்கு வரும் மதுபிரி யர்களால் எங்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த மது க்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே மதுக்கடையை இப்பகுதியில் அமைக்க கூடாது என்று கூறினர்.
ஏற்கனவே உடுமலை பகுதியில் அதிமுக, திமுகவினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மக்கள் நடத்திய இந்த சாலைமறியல் போராட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.