உடுமலை அமராவதி அணையில் சுற்றுலாவை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு; கிடப்பில் போடப்பட்ட மக்கள் கோரிக்கை
Tirupur News- உடுமலை அமராவதி அணையில் அடிக்கடி ஆய்வு நடத்தும் அதிகாரிகள் குழு, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வெறும் ஆய்வு மட்டுமே நடத்தி வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி சுற்றுலா மையத்தை மேம்படுத்த, சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில், அமராவதி அணை அமைந்துள்ளது. மிக நீளமாக அமைந்துள்ள அணைப்பூங்கா, படகு சவாரி, அரிய வகை கள்ளி வகைகளை கொண்ட பாறை பூங்கா, வனத்துறை முதலைப்பண்ணை என, சுற்றுலா மையமாக அமைந்துள்ளது.
பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து, ஆண்டுக்கு ஏறத்தாழ, ஒரு லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா வாயிலாக, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், அமராவதி அணை பூங்காவில் பராமரிப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. பூங்கா மற்றும் இதர பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. சுற்றுலா மையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமராவதி அணைப்பூங்காவில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து, திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரவிந்த், ஆண்டிய கவுண்டனுார் ஊராட்சித்தலைவர் மோகனவள்ளி, கல்லாபுரம் ஊராட்சித்தலைவர் முத்துலட்சுமி, ராஜசேகரன், பழனிச்சாமி, மானுப்பட்டி அரவிந்த், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சங்க தலைவர் குளோபல் பூபதி, நவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.5 கோடியில் பணிகள்
மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் முதன்மை சுற்றுலாத்தலமாக உள்ள அமராவதி அணை பூங்காவை சுற்றுலாத்துறை வாயிலாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறை வாயிலாக, ரூ.5 கோடி மதிப்பில், சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு பெறப்பட்டுள்ளது.
அதில், குடிநீர், கழிவறை வசதிகள், சிறுவர் பூங்கா, கம்பி வேலி அமைத்தல், குப்பைத்தொட்டி, வழிகாட்டி பலகைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண மின் விளக்குகள், தோட்டம் சீரமைத்தல், அழகிய சுவர் ஓவியங்கள், புகைப்பட கண்காட்சிகள், நடைபாதை, சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசுக்கு, இந்த கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான அனுமதி பெறப்பட்டு, சுற்றுலா மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, தெரிவித்தார்.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான அமராவதி அணையில் சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்தப்படும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.