மக்காச்சோளத்தில் எதிர்பார்த்த விலை இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த விலை கிடைக்காததால், பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
உடுமலை பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், மக்காச்சோளம் சாகுபடி அதிகளவில் செய்யப்படும் பகுதிகளாக உடுமலை பகுதி ஒன்றியங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை வழக்கமாக டிசம்பர் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும். நடப்பாண்டும் பயிர் வளர்ச்சி மற்றும் கதிர் பிடிக்கும் பருவத்தில் பெய்த கன மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நீடித்த கனமழை தற்போது குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.படைப்புழு தாக்குதல், கனமழை காரணமாக தற்போது 25 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. மகசூல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், குவிண்டால், 2,400 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், எதிர்பார்த்த விலை கிடைக்காமல், விவசாயம் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது;
கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் 2,800 ரூபாய் வரை விற்றதால், நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர் தங்களது நிலங்களில், அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். .இதனால் சாகுபடி பரப்பு பன்மடங்கு அதிகரித்தது.படைப்புழு தாக்குதல், தொடர்ந்து பெய்த கனமழை, இடு பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி செலவு பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது. இதனால், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்யவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைப்பை தவிர்க்கும் வகையில், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் ஏல வசதி செய்து தர வேண்டும். வேளாண் வணிகத்துறை வாயிலாக கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, கூடுதல் விலைக்கு உள்ளூர் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், கறிக்கோழி வளர்ச்சியில் முக்கிய தீவனமாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. மாட்டுத்தீவன உற்பத்தியிலும், இது அதிகளவில் பயன்படுவதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக, கூடுதல் விலைக்கு உள்ளூரில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.