உடுமலையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
Tirupur News- உடுமலை ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது,
குடிமங்கலம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படுகின்ற தண்ணீரில் முறைகேடு நடந்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். ஒரு சில ஊராட்சிகள் முறைகேடாக தண்ணீரை எடுத்து வருகின்றன. உடுமலை வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சந்தை வளாகத்தில் நடைபெற்று வருகின்ற கட்டிடங்கள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதி வழியாக செல்கின்ற பி.ஏ.பி. கால்வாய் கரையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உடுமலை-பழனி சாலையில் உள்ள அண்ணா குடியிருப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. வேகத்தடுப்புகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணிக்கடவு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் பாதை பராமரிப்புக்காக தென்னை மரத்தின் ஓலைகளை அடிக்கடி வெட்டுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. உடுமலை நில அளவை துறை செயல்படாத துறையாகவே உள்ளது. உடுமலை பகுதியில் நில மோசடி அதிக அளவில் உள்ளது.
எனவே ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மீது தனி கவனம் செலுத்துவதுடன் நில மோசடியை தடுக்க வேண்டும். துங்காவி அருகே கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளால் சாலையோரத்தில் உள்ள மல்பெரி செடிகள் தூசி படிந்து வளர்ச்சி பாதித்தும், பட்டுப்புழுக்கள் செத்தும் விடுகிறது.
குடிமங்கலம் பகுதியில் மாட்டுச்சந்தை, ஆட்டுச் சந்தை அமைத்து தர வேண்டும்.தேங்காய் பருப்பு கொள்முதலை அதிகரிக்க வேண்டும். குடிமங்கலம் பகுதியில் காட்டுப் பன்றிகள் வாழை, மக்காச்சோளம், பட்டு பூச்சி செடி உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகிறது. அவற்றை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சேரிமலை- பெதப்பம்பட்டி ரோட்டில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலை குறுகிப்போனது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் குறைகளை தெரிவித்துப் பேசினர்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் சுந்தரம் (உடுமலை), பானுமதி (மடத்துக்குளம்), கார்த்திகேயன் (குடிமைப்பொருள்) உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.