மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை; உடுமலை விவசாயிகள் கோரிக்கை

Tirupur News-உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-11-15 09:44 GMT

Tirupur News-உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை (கோப்பு படங்கள்)

Tirupur News, Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இரு பருவங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் படைப்புழு தாக்குதல், வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களினால் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

அதிலும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி தாமதமானது.

தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,

மக்காச்சோளம் சாகுபடிக்கு வழக்கமாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்தது. தற்போது படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நான்கு முறை மருந்து தெளிக்க வேண்டியுள்ளதால் விதைப்பு முதல் அறுவடை வரை சாகுபடி செலவினம் 35 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆனால் மார்க்கெட்டில் விலை குறைந்தே காணப்படுகிறது.

தற்போது ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலையும் வரத்து அதிகரிக்கும் போது குறைந்து விடும். இதனால் உடுமலை சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

கால்நடைகளுக்கு தீவனத்திற்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆதார விலை நிர்ணயித்தல், அரசு கொள்முதல், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

Similar News