சுற்றுலா பயணியர் வாகனங்களை கவனமாக இயக்க வனத்துறை எச்சரிக்கை
Tirupur News-வால்பாறை மலைப்பாதையில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today-வால்பாறை மலைப்பாதையில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக யானை, காட்டுமாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் பகல் நேரத்தில் கூட வெளியே உலா வரத்துவங்கியுள்ளன. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், புதுத்தோட்டம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால்குரங்குகள் ஆபத்தை உணராமல் ரோட்டில் துள்ளிவிளையாடுகின்றன. ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இந்த ரோட்டில் வேகமாக வரும் போது, சில நேரங்களில் வன விலங்குகள், வாகனத்தில் சிக்கி இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே வால்பாறை மலைப்பாதையில், வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணியர் தங்கள் வாகனங்களை கவனமாகவும், மெதுவாகவும் இயக்க வேண்டும்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், சமீப காலமாக வாகனங்கள் போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால்,சுற்றுலா பயணியர் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்காமல், மெதுவாக இயக்க வேண்டும்.
மேலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை, இரவு நேரங்களில் வனவிலங்குகளை காட்டித்தருவதாக கூறி, தங்கும் விடுதி உரிமையாளர்கள் வெளியில் அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.