திருமூர்த்திமலை; விளைநிலங்களில் யானைகள் அட்டகாசத்தால், விவசாயிகள் கவலை
Tirupur News,Tirupur News Today-திருமூர்த்திமலையை அடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து சேதப்படுத்தியதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி மற்றும் கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் போதுமான அளவில் உணவு, குடிநீர் கிடைக்காத நிலையில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
யானைகளின் நடமாட்டத்தால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டுவழித்தடங்களில் சென்றுவரவே, விவசாய தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர். ஆனால், கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில், யானைகளின் நடமாட்டம் விவசாய தொழிலாளர்களை பீதியடைய வைக்கிறது. மேலும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடும் யானைகளால், விவசாயிகள் பலத்த நஷ்டமடைவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.
இந்நிலையில் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் திருமூர்த்திமலையை அடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து மாமரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியதுடன், ஏராளமான தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றன.
விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.இதனால் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.