உடுமலையில், தக்காளி விற்பனை சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலையில் தக்காளி விற்பனைக்கு என, தேவையான வசதிகளுடன் தனி சந்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-08-01 12:39 GMT

உடுமலையில், தக்காளி விற்பனைக்கு என தனியாக சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் ஆண்டு முழுவதும் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் விளையும் தக்காளிகளை, விவசாயிகள் விற்பனைக்காக உடுமலை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வந்து தக்காளி வாங்கி செல்கின்றனர். 

உடுமலை சந்தைக்கு நேற்று தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. ஏற்கனவே உற்பத்தி அதிகரித்து, தக்காளி  குவிந்த நிலையில், நேற்று வரத்து மேலும் பன்மடங்கு அதிகரித்தது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

விவசாயிகள் கூறியதாவது:

தக்காளி வரத்து அதிகரிக்கும்போது, விலை வெகுவாக குறைவதால் பறிக்கும் கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட விவசாயிகளுக்கு கட்டுபடியாவதில்லை. இந்த அவல நிலைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உடுமலையில் தக்காளி விற்பனைக்கு என, நல்ல வசதிகளுடன் தனிச்சந்தை அமைக்க வேண்டும். தக்காளி விவசாயிகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் வியாபாரிகள் அந்த சந்தையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நுழைவாயிலில் சுங்கம் வசூலிக்கும்போதே, ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு தக்காளி கொண்டு வந்திருக்கிறார் என்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரங்களில், தக்காளி வரத்து குறித்த விவரங்கள் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவிக்க செய்ய வேண்டும். சந்தையில் நவீன குளிர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும். விலை குறைவாக கிடைக்கும் நாட்களில் அங்கு இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

விவசாயிகள் ஒருங்கிணைந்து தக்காளி பவுடர், ஜாம், சாஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையிலான பயிற்சிகள், உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

தக்காளிக்கு விலை இல்லாமல் ரோட்டில் கொட்டுதல், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்தல், கால்நடைகளை மேய விடுதல் போன்ற அவலங்கள் நடக்காமல் தடுக்க, தக்காளி விற்பனைக்கு என தனியாக சந்தை அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு  எடுக்க வேண்டும், என்றனர்.

Similar News