விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
உடுமலையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில், மத்திய அரசின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் 'உடுமலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' சார்பில், விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி பரமேஸ்வரன் வரவேற்றார். மத்திய அரசின், 'அபேடா' அமைப்பின் செயலர் மாதையன் அங்கமுத்து காணொளி வாயிலாக தலைமை ஏற்று பேசினார். 'சேம்பர் ஆப் காமர்ஸ்' தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (பொள்ளாச்சி), அருண்கார்த்திக் (உடுமலை), ராஜலட்சுமி கெங்குசாமி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரவீந்திரன் உட்பட பலர் பேசினர்.
பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசியதாவது: 'நம் நாட்டில், வேளாண் தொழில் பிரதானமாக இருந்தாலும், ஏற்றுமதியானது, பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஒரு சதவீதம் அளவுக்கே உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்கி, சிறு, குறு விவசாயிகளை, அதில், ஒருங்கிணைத்து, மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை பெற வாய்ப்புள்ளது.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. ஆனால், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போதியளவு இல்லை. எனவே, விவசாயிகளை ஒருங்கிணைத்து, வழிகாட்டினால், அவர்களுக்கு நிரந்தர வருவாயும் கிடைக்கும். இவ்வாறு பேசினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசினார்