பீன்ஸ் விலை வீழ்ச்சி; உடுமலை விவசாயிகள் கவலை
Tirupur News-உடுமலையில் பீன்ஸ் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
Tirupur News,Tirupur News Today- உடுமலையில் பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
உடுமலையில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் உள்ளது தமிழக-கேரள எல்லை. இங்கு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள 18 செட்டில்மெண்ட் கிராமங்களில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், அமராவதி வனச் சரகத்துக்குள்பட்ட தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி ஆகிய மூன்று மலைவாழ் கிராமங்களில் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டு சுமாா் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி பகுதிகளில் இவா்களுக்கு சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலத்தில் நெல், பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை மலைவாழ் மக்கள் கடந்த டிசம்பா் மாதம் பயிரிட்டுள்ளனா். குத்து பீன்ஸ், கொடி பீன்ஸ் என இரண்டு வகையான பீன்ஸ்களை பயிரிட்டிருந்த மலைவாழ் மக்களுக்கு அவ்வப்போது பெய்த மழை ஓரளவு கைகொடுத்ததால் பீன்ஸ் நன்றாக விளைந்து மாா்ச் இரண்டாவது வாரத்தில் அறுவடைக்கு வந்தது.
இதைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாா்க்கெட்டுகளில் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விலை கிடைத்து வந்ததால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனா்.
இந்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே பீன்ஸ் விலையில் சரிவு ஏற்பட்டது. தற்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையே விலைபோவதால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.
பீன்ஸ் குறைந்த விலைக்கு விற்பனையாவதால், அதில் இருக்கும் முத்துகளை மட்டும் தனியே பிரித்து, காயவைத்து பக்குவப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனா். அந்த வகையில் காய வைத்த பீன்ஸ் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து தளிஞ்சி மலைவாழ் மக்கள் கூறியதாவது:
எங்களது பகுதிகளில் விளையும் பீன்ஸை சரக்கு வேன், வாகனங்களுக்கு வாடகை கொடுத்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள மாா்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீன்ஸுக்கு நல்ல விலை கிடைத்த நிலையில், தற்போது கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.
இது கூலிக்குகூட கட்டுப்படியாகவில்லை. பீன்ஸில் உள்ள முத்துகளை பிரித்து எடுத்து காயவைத்து விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, பீன்ஸ் பயிருக்குகான விலையை அரசு நிா்ணயம் செய்துதர வேண்டும் என்றனா்.