உடுமலையில் மின் இணைப்பு வழங்கும் முகாம்
மின் இணைப்பு வழங்கும் முகாம், உடுமலையில் நாளை நடக்கிறது.;
மாநில அரசு அறிவித்துள்ள, ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான திட்டத்தில், உடுமலை கோட்டத்தில் மின் இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. விண்ணப்பங்களில், நில உரிமை மாறியிருந்தால், பெயர் மாற்றம் மற்றும் புல எண் மாற்றம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், நாளை (12ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை , உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
உடுமலை கோட்டத்தில், 2003 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை சாதாரண வரிசையில் பதிவு செய்த விண்ணப்பங்களும், 2013 ஏப்ரல் 1 முதல் 2018 மார்ச் 31 வரை, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று, விண்ணப்பங்களில் பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்களுக்கு, மின் வாரிய அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் பெறாதவர்களும், கொடுக்கப்பட்ட காலத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளும், ஒப்புதல் அட்டை, வி.ஏ.ஓ.,விடம் பெற்ற நில உரிமைச்சான்று, கிணறு, ஆழ்குழாய் கிணற்றை குறிக்கும் வரைபடத்துடன் பங்கேற்று, பெயர் மாற்றம், புல எண் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
உடுமலை கோட்டத்திற்குட்பட்ட நகரம், காந்திநகர், கிராமம் வடக்கு, தெற்கு, கிழக்கு, உடுமலை, வாளவாடி, தளி, மானுப்பட்டி கிராமம், மேற்கு, எலையமுத்துார், பூலாங்கிணர், மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், பூளவாடி, துங்காவி, குடிமங்கலம் உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட விவசாயிகளும் பங்கேற்கலாம். இத்தகவலை, உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.