திருமூர்த்தி அணையில் உபரி நீர் வெளியேற்றம்; பாலாற்றின் கரையோர பகுதி பொது மக்களுக்கு எச்சரிக்கை
Tirupur News- திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பாலாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமூர்த்திஅணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் உயிர் நாடியாக பி.ஏ.பி. அணைகள் விளங்கி வருகிறது.
இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம் பாளையம்,மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கினர் குடி மங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருமூர்த்தி அணையின் முக்கிய நீராதமான பாலாறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.
மேலும் அணைக்கு காண்டூர் கால்வாய் மற்றும் பாலாறு மூலமாக வினாடிக்கு 1141 கன அடி அளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.இதனால் 60 அடி உயரமுள்ள அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து 57 அடியை கடந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாலாற்றில் வினாடிக்கு 901 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு 1141 தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பாலாற்றின் கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பாலாறு, பொள்ளாச்சி தாலுகா கிராமங்கள் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறது.
எனவே அங்குள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.