உடுமலை அருகே குங்குமப்பூ மலர்கள் சாகுபடி
Tirupur News- உடுமலை அருகே காந்தலூரில் குங்குமப்பூ மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் மலைப்பகுதியாகவும், குளிர் சீதோஷ்ண நிலை காணப்படும் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி என குளிர் பிரதேஷங்களில் மட்டும் விளையும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் மட்டும் விளையும் குங்குமப்பூ கேரள அரசு நிறுவனமான, கிருஷி விகாஸ் கேந்திரா சார்பில், காந்தலூர் பெருமலையை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி நிலத்தில் பரிசோதனை முறையில் நடவு செய்யப்பட்டது.
காஷ்மீர், பாம்போரா கிராமத்தில் இருந்து குங்குமப்பூ கிழங்கு கொண்டு வரப்பட்டு இயற்கை உரங்கள் இட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது, காஷ்மீரில் விளைவது போலவே நன்கு வளர்ந்து, அதே நிறம், குணம் ஆகியவற்றுடன் முதல் முறையாக குங்குமப்பூ அறுவடை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விஞ்ஞானிகள் சுதாகர், சவுந்தரராஜ், மாரியப்பன், வெங்கட்சுப்ரமணியம் குழுவினர், சாகுபடி முதல் அறுவடை வரை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது,
நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை சாகுபடி காலமாக கொண்டு இரு ஆண்டுகளாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் கிழங்கு நடவு செய்தால் 2.5 லட்சம் பூக்கள் பூக்கின்றன.
ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 மாதங்களில் சராசரியாக ரூ.4.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. சாகுபடி செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அவை வளர்வதற்கு மழை குறைவாகவும், குளிர் சீதோஷ்ண நிலை நிரந்தரமாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுக்கு இது குறித்த அறிக்கை அளித்து இப்பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்றனர்.