மழைக்கு வீணான பயிர்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
உடுமலையில், மழைக்கு சேதமான பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், தொடர் மழை பெய்து வருகிறது. பி.ஏ.பி., நான்காம் பாசனம் மற்றும் மானாவாரியாக, பல ஆயிரம் ஏக்கரில் சோளம் உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால், பல இடங்களில், பல ஏக்கர் பரப்பளவிலான சோளம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாய்ந்து, சேதமடைந்தன.
மழையால், காய்கறி மற்றும் சோளப்பயிர் உள்ளிட்டவை, அறுவடை சமயத்தில் அடியோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, வருவாய் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர், உரிய கள ஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.