கடத்துார் ராஜவாய்க்காலில் முதலைகள்; பொதுமக்கள் பீதி
Crocodile River - கடத்தூர் ராஜவாய்க்கால் பகுதியில் முதலைகள் உள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Crocodile River -உடுமலை அமராவதி அணையிலிருந்து துவங்கும் அமராவதி ஆற்றில் கல்லாபுரம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். அவ்வப்போது பாறையில் படுத்து ஓய்வெடுக்கும் முதலையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் ராஜவாய்க்கால் பகுதியில் தண்ணீரில் நீந்தி வந்த முதலை ஒன்று புதருக்குள் செல்வதை விவசாயி ஒருவர் பார்த்துள்ளார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
முதலைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததும் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தினால் தான் முதலையைப் பிடிக்க முடியும் என்று அங்கிருந்தே பதில் கூறியுள்ளனர். உடனடியாக பொதுப்பணித்துறையினர் அனுமதியுடன் பாசன நீர் நிறுத்தப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் கடத்தூர் வந்த வனத்துறையினர் வாய்க்கால் கரையிலிருந்த புதர்களை அகற்றினால் தான் முதலையைப் பிடிக்க முடியும் என்று கூறி, சென்று விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினருக்கு தெரிவித்தால் அவர்கள் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி புதரை அகற்ற முன்வரவில்லை. பாசன நீர்த்திருட்டை கண்காணிக்கவும், தடுக்கவும் இடையூறாக உள்ள புதர்களை அகற்றுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும் பேரிடர் மேலாண்மையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வருவாய்த்துறையினர், ஒதுங்கிக் கொண்டனர். இதனால் முதலையைப் பிடிக்கும் பணிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.ஊராட்சி நிர்வாகம் ஸ்பீக்கர் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தது. இதனையடுத்து வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வரை முதலையை பிடிப்பதற்கான சிறு முயற்சியைக் கூட வனத்துறையினர் மேற்கொள்ளவில்லை. பல கிராமங்களில் உலா வரும் முதலைகள் இதுவரையில் மனிதர்களைத் தாக்கியதில்லை என்பதால் அனைத்துத்துறை அதிகாரிகளும் அலட்சியம் காட்டுகிறார்கள். அமராவதி முதல் கடத்தூர் வரை பல இடங்களில் காணப்படும் முதலைகளை கண்காணித்து, உரிய முறையில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2