உடுமலை அமராவதி ஆற்றில் முதலை; பொதுமக்கள் அச்சம்
Tirupur News- உடுமலையை அடுத்துள்ள அமராவதி ஆற்றில் முதலை காணப்படுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tirupur News,Tirupur News Today- தாராபுரத்தை அடுத்த சீத்தாக்காடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் உள்ளது சீத்தக்காடு. இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையோரத்தில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தாராபுரம், குண்டடம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்தப் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தடுப்பணையும் உள்ளது. இந்தத் தடுப்பணையைக் கடந்து அக்கறைக்கு விவசாயத்தொழிலாளர்கள் பணிக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், தடுப்பணையின் நடுவே உள்ள பாறையின் மீது சுமார் 8 அடி நீள முதலை படுத்துக்கொண்டிருப்பதை அங்கு குளிக்கவந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், தடுப்பணையில் இறங்காமல் ஆற்றின் கரையில் அதிக அளவிலான பொதுமக்கள் திரளத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் அந்த முதலை நீருக்குள் சென்றது.
இதுகுறித்து சீத்தாக்காடு பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
அமராவதி அணையிலிருந்து தப்பிவந்த 4 முதலைகள் இப்பகுதியில் நடமாடி வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக இந்த முதலைகளைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதன் காரணமாக தடுப்பணையின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நடந்து செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அமராவதி ஆற்றில் உள்ள முதலைகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.