உடுமலை பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பரவலை முழுமையாக கட்டுப்படும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலைபேட்டை நகராட்சிக்கு உட்பட பகுதிகளில், தினசரி 50 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடும், அதிகாரிகள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளாலும் இது சாத்தியமாகி இருக்கிறது.
இந்த நிலையில், உடுமலை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர். நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.