உடுமலை; பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு
Tirupur News,Tirupur News Today- உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் திறன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செயல்பாடு குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆய்வாளர், உதவி திட்ட அலுவலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உள்ளடக்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொள்வர்.
அவ்வகையில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து குழுவினர் கூறியதாவது,
பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வின் போது வகுப்பறைக்கு நேரடியாக சென்று மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சோதிக்கப்படும். ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பது குறித்தும் கேட்டறியப்படும். இது தவிர அலுவலர்களின் செயல்பாடு, பள்ளி வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை, குடிநீர் வசதி, பதிவேடுகள் பராமரிப்பு, எமிஸ் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்தும் பரிசோதிக்கப்படும்.
குறைகள் கண்டறியப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். அதன்படி உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாதந்தோறும் 3 பள்ளிகளில், ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராமப்புற பள்ளிகளை பொருத்தவரை மாணவர்களின் கற்றல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாணவியர் கற்றல் திறன் அபாரமாக காணப்படுகிறது. எனினும் மாணவ, மாணவியர் மத்தியில் மொபைல் போன் புழக்கமும் சற்று அதிகரித்து வருவதால், ஒரு சில மாணவ, மாணவியர் கற்றல் திறன் அதனால் பாதிக்கப்படுகிறது. வீடுகளில், பெற்றோர் இதுகுறித்து கண்காணித்து, பிள்ளைகளின் மத்தியில் மொபைல் போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.