உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை - பக்தர்கள் ஏமாற்றம்

Tirupur News- உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதித்ததால் அங்கு வந்து பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-10-16 08:19 GMT

Tirupur News- பஞ்சலிங்க அருவி (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த சூழலில் கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியவாறு அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்து திருமூர்த்தி அணையை அடைந்தது. இந்தநிலையில் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.

ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.    

Tags:    

Similar News