பெற்றோரை, பெரியோரை பேணிக் காக்க வேண்டும்; முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் திருப்பூரில் பேச்சு
Tirupur News- வீட்டில் உள்ள பெற்றோரை, பெரியோரை பேணிக் காக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தினார்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் முத்தூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தற்போதைய இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா அளவில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராம பகுதி மாணவ, மாணவிகளின் கல்லூரி கல்வி கனவு நிறைவேறி வருகிறது.
மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்கால இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும்.
நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தபோது மும்பை குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு உள்பட 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நன்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தாய், தந்தை மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து பேணி காக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக பெற்றோர்களை இறுதி வரையில் வணங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் மிக சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு முடிந்த வரையில் ஏதாவது உதவிகள் செய்திட வேண்டும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நாட்டிற்கு பணியாற்றிட ராணுவத்தில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.