பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாரான திருப்பூர்; கடைகளில் கூட்டம், மக்கள் முகங்களில் குதூகலம்

Tirupur News- நாளை தை மாதம் பிறக்கிறது. பொங்கலை கொண்டாட திருப்பூர் மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வாங்கவும், ஆடைகள் எடுக்கவும், பூக்கள், பூஜை பொருட்கள் வாங்க திருப்பூர் வீதிகள் களைகட்டியது.;

Update: 2024-01-14 10:05 GMT

Tirupur News- பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாரான திருப்பூர் (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today - தை பிறந்தால் வழி பிறக்கும்'என, பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ, புதிய நம்பிக்கையுடன் பண்டிகையை, காப்புக்கட்டி வரவேற்க திருப்பூரில் மக்கள் மகிழ்ச்சியாக தயாராகிவிட்டனர்.

விவசாயம் செழிக்க துணை செய்யும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒட்டுமொத்த தமிழர்களும், அறுவடை திருநாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். பயிர் வளர கருணை கரம் நீட்டிய சூரிய பகவானுக்கு, புத்தரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

போகி பண்டிகை

போகி பண்டிகையான இன்று, வீடுகளை சுத்தம் செய்து, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்றபடி, பழைய பொருட்களை அப்புறப்படுத்தி, காப்பு கட்டப்படுகிறது. கோவில், வீடு, தொழிற்சாலை, வாகனங்களுக்கு, வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொண்டு காப்புக்கட்டி, பொங்கல் பண்டிகையை வரவேற்க தயாராகிவிட்டன

திருப்பூர் நகரப்பகுதியில், நேற்று வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துக்கள், கட்டுக்கட்டாக விற்கப்பட்டன. நாளை அதிகாலையில், பொங்கல் வைத்து வழிபட ஏதுவாக, மண்பானை, அடுப்பு, விறகு ஆகியவை விற்கப்படுகின்றன. மஞ்சள் கொத்து கட்டிய புதிய மண்பானையில், பச்சரிசி கொண்டு சர்க்கரை பொங்கல் வைத்து, தலைவாழை இலையில், பொங்கல், கடலைபொரி, முறுக்கு, கரும்பு, பழவகைகள் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபட உள்ளனர்.

பொங்கல் பண்டிகையில், வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக, வாசல்களில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகி, வண்ண கோலமிடுவர்; அதற்காக, கலர் கோலப்பொடி விற்பனையும் களைகட்டியுள்ளது.

கரும்பு விற்பனை

ரேஷன் கடையில் கரும்பு வழங்கினாலும் கூட, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக, சேலம், திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் இருந்து, கரும்பும் விற்பனைக்கு வந்துள்ளது. விவசாயிகள், தோட்டங்களில் விளைவித்த, மஞ்சள் செடியை, கிழங்குடன் எடுத்து வந்து விற்கின்றனர்.

விவசாய பணிகளுக்கு ஒத்துழைத்த, கால்நடைகளுக்கு நன்றி கூறும் வகையில், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். 17ம் தேதி சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக கொண்டாடும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தொடர்ச்சியாக, பனியன் நிறுவனங்கள், அதுசார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால், உற்சாகத்துடன் கொண்டாட, ஒட்டுமொத்த திருப்பூரும் தயாராகி விட்டது!

Tags:    

Similar News