திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

tirupur News, tirupur News today- திருப்பூரில் கத்திரிக்கோலால் குத்தப்பட்ட வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2023-04-02 08:47 GMT

tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களின் தொகுப்பு.

கத்திரிக்கோலால் குத்தி வாலிபர் கொலை; இருவர் கைது

tirupur News, tirupur News today- திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானிநகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த மாரியப்பன் (45) என்பவரிடம் ரூ.8,500 கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி இரவு, மாரியப்பன், தனது நண்பர் முனியசாமி (23) என்பவருடன் சக்திவேலின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அங்கு சக்திவேல் அப்போது இல்லை. வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சக்திவேலின் நண்பரான திருப்பூர் கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (29) அங்கு சென்று கேட்டுள்ளார். தொடர்ந்து பிரச்னை ஏற்படவே, ஒரு கட்டத்தில் மாரியப்பன், முனியசாமி ஆகியோர் சேர்ந்து, கத்திரிக்கோலால் மணிகண்டனின் மார்பு, வயிறு பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, மாரியப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் நேற்று  உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கார் - பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் கோபி (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், இறுதி ஆண்டு படித்து வந்தார். கோபி மற்றும் அவரது உறவினர் கிரிராஜ் நேற்று காலை திருச்சியில் இருந்து கோவை நோக்கி காங்கயம் வழியாக, பைக்கில் வந்தனர். பைக்கை, கோபி ஓட்டி வந்தார். அப்போது காங்கயம் அருகே காடையூர் பகுதியில் காலை 8 மணியளவில் வந்தபோது எதிரே வந்த ஒரு கார், இவர்களது பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கோபி மற்றும் கிரிராஜ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

5 ஆண்டுகளாக தலைமறைவானவர் கைது

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சுப்ரமணியம் (வயது 25). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அந்தப் பகுதியில் நடந்த அடி-தடி பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியத்தை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேன் மோதி வாலிபர் பலி

திருப்பூர் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே, தாராபுரம் செல்லும் சாலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுரேஷ் (வயது 25) ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதியது. இதில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரிகின்றனர். 

Tags:    

Similar News